உறக்கத்தை உதிர்த்து,
கடவுளைத் தேடி பயணமானது என் கால்கள்.
நெய் வீசும் கோவிலில் தேடினேன்
தேன் சிந்தும் தேவாலயத்தில் தேடினேன்
மல்லிகை மணம் பரப்பும் மசூதியில் தேடினேன்.
பிழைப்புக்காக கடவுளைத் தொழும் பக்தர்களை பார்க்க முடிந்தது
பாவியால் பகவானை மட்டும் பார்க்க முடியவில்லை.
காசு வாங்கி கருவறைக்குள் செல்லும்
நுழைவு சீட்டை கொடுத்தவர்களால் கூட
கடவுளைக் காண அருகதையற்றவர்களாக இருக்கின்றனர்.
களைப்படைந்து கட்டாந்தரையில் கவிழ்ந்த எனக்கு
கழிவறை சுத்தம் செய்யும் மனிதன் தந்த
காப்பி தண்ணி, கடவுளின் தீர்த்தமாக தெரிந்தது.
நன்றி சொல்ல கை கூப்பி அவனைப் பார்க்கும் போது
அவன் உருவம் மறைந்தது; கடவுளின் அரூபம் தெரிந்தது.
- மோகன் கந்தசாமி