Thursday, May 30, 2013

!!! உன்னை சந்திக்கும் சங்கமத்தில் !!!

உன்னை ஒவ்வொரு  முறை பார்க்கும் போதும்
ஆவலில், என் இதயம் நழுவி இரைப்பையில்
விழுந்து விடுமோ என்று சிறியதாய் ஒரு கலக்கம்

என் நுரையீரல் தொடும் மூச்சுக் காற்று கூட
உன் பூந்தேகத்தை  வருடிப் பார்க்க ஏங்கித் தவிக்கிறது

நீ குளித்து விட்டு பூசிய மஞ்சள் வாசம்
என்னை மீளா மயக்கத்தில்  மாய்க்கிறது 

உன் விழிகள் காட்டும் சிறு அசைவு கூட
என்னை, மீன்களின் பின்னே செல்லும் கொக்கைப் போல
உன் தாவணி பின்னே தவமியற்றச் செய்கிறது

'போய் வருகிறேன்' என்று உன் உதடுகள் உச்சரிக்கும் முன்பே
என் நாணம் உனக்கு முன்பாக, உனக்காக காத்திருக்கிறது 
                                                                                              - மோகன் கந்தசாமி 

Wednesday, May 29, 2013

கமல்ஹாசனின் நாத்திக கவிதை

கிரகணாதி கிரகணங்கட்கப்பாலுமே
ஒரு அசகாய சக்தியுண்டாம்
ஆளுக்கு ஆளொரு பொழிப்புரை கிறுக்கியும்
ஆருக்கும் விளங்காததாம்
அதைப்பயந்து அதையுணர்ந்து
அதைத் துதிப்பதைத்தன்றி
 பிறிதேதும் வழியில்லையாம்

நாம் செய்ததெல்லாம் முன்செய்ததென்று
விதியொன்று செய்வித்ததாம்
அதைவெல்ல முனைவோரை
சதிகூட செய்தது அன்போடு ஊர்சேர்க்குமாம்
குருடாக செவிடாக  மலடாக முடமாக
கருசேர்க்கும் திருமூலமாம்
குஸ்ட குஸ்யம் புற்று சூலை மூலம்
என்ற குரூரங்கள் அதன் சித்தமாம்

புண்ணில் வாழும் புழு
புண்ணியம் செய்திடின் புதுஜென்மம் தந்தருளுமாம்
கோடிக்கு ஈஸ்வரர்கள் பெரிதாக வருந்தாமல்
சோதித்து கதிசேர்க்குமாம்
ஏழைக்கு வருதுயரை
வேடிக்கை பார்ப்பததன்  வாடிக்கை விளையாடலாம்

நேர்கின்ற நேர்வெல்லாம் நேர்விக்கும் நாயகம்
போர்கூட அதன்செயலாம்
பரணிகள் போற்றிடும்
உயிர்கொல்லி மன்னர்க்கு
தரணிதந்தது காக்குமாம்
நானூறுலட்சத்தில் ஒருவிந்தை  உயிர்தேற்றி
அல்குலின் சினைசேர்க்குமாம்

அசுரரைப்பிளந்தபோல் அணுவதைப் பிளந்தது
 அணுகுண்டு செய்வித்ததும்
பரதேசம் வாழ்கின்ற அப்பாவி மனிதரை
பலகாரம் செய்துண்டதும்
பிள்ளையின் கறியுண்டு நம்பினார்க்கருளிடும்
 பரிவான பரபிரம்மமே

உற்றாரும் உறவினரும் கற்றாரும்
கற்றுக் கற்பித்து உளமார  தொழும்சக்தியை
மற்றவர் வை(யும்) பயம் கொண்டு நீ போற்றிடு
அற்றதை உண்டென்று கொள்!
ஆகமக்குளம் மூழ்கி மும்மலம் கழி
அறிவை ஆத்திகச் சலவையும் செய்!

கொட்டடித்துப் போற்று..!
மணியடித்துப்போற்று கற்பூர ஆரத்தியை..!
தையடா ஊசியில் தையெனத் தந்தபின்
தக்கதைத் தையாதிரு!
உய்திடும் மெய்வழி உதாசீனித்தபின்
நைவதே நன்றெனில் நை!

Friday, May 17, 2013

நான் படிக்காமல் போயிருந்தால்?

நான் படிக்காமல் போயிருந்தால்?
    
பெரியவர்களை மதித்திருப்பேன் 
    
நல்லவைகளை மட்டும் துதித்திருப்பேன்.

 நான் படிக்காமல் போயிருந்தால்?
      
எளிய வார்த்தைகளில்
      
தமிழ் பேசியிருப்பேன்    
     
முகம் சுளிக்கும்
    
காரியங்களை தவிர்த்திருப்பேன்.

  நான் படிக்காமல் போயிருந்தால்?
    
தரங்கெட்ட  மனிதர்கள் காசுக்காக
    
வெளியை மாசுபடுத்தும் செயலை
    
மரம் வைத்து திறம் படத் தடுத்திருப்பேன்.

நான் படிக்காமல் போயிருந்தால்?
    
பீட்சா, பர்கர், நூட்ல்ஸ் , கோக்
    
போன்ற வாய் கூசும் உணவுகளை
    
மனம் கூசி மறுத்திருப்பேன்.

 நான் படிக்காமல் போயிருந்தால்?
    
ஆண்மைக்கும் பெண்மைக்கும்
    
அழகாக கோடு பிரித்து
    
மனிதம் எனும் மகத்தான
    
வீடு வடித்திருப்பேன்.

  நான் படிக்காமல் போயிருந்தால்?
    
கேளிக்கையில் நாளிகையை வீணாக்காமல்
    
வாழ்க்கைக்கு பண்பு எனும் ஆடை உடுத்தி
    
சுயநலம் எனும் நிர்வாணத்தை தவிர்த்திருப்பேன்.

  நான் படிக்காமல் போயிருந்தால்?
     
மதுபானம், சிகரெட், ஆபாசம், இவையெல்லாம்
    
கெட்ட வார்தையென கூறி அனுபவிக்க மறுத்திருப்பேன்.
     '
நேர் பட' பேசும் கலையை உலக
     
வரைபடத்தில் தேடியிருக்க மாட்டேன்.

 நான் படிக்காமல் போயிருந்தால்?
    
மாட்டுச் சாணத்தை அசிங்கமென சொல்லாமல்
   
கிருமி கொல்லி என உரைத்திருப்பேன்.
   
அரிசி மாக்கோலம் அழகுக்கில்லை எறும்புக்கு
   
உணவென தத்துவம் பேசியிருப்பேன்.

 நான் படிக்காமல் போயிருந்தால்?
   "Gated Community"
என்று என்னை என் வீட்டுக்குள்
   
சிறை வைக்காமல், திண்ணை வைத்து
   
வழிப்போக்கனக்கும் வசதி கொடுத்திருப்பேன்.

 நான் படிக்காமல் போயிருந்தால்?
    
ஊருக்கு நீர், இதில் யார்க்கு போர்
   
என நதிகளை மட்டுமல்ல
   
மனிதர்களையும் இணைத்திருப்பேன்.

 
நான் படிக்காமல் போயிருந்தால்?
    
காதைப் பிளக்கும் சத்தத்தை
   
இசை என்று கூறாமல்
   
கன்னி அணியும் கொலுசின் ஓசையையும்
   
குருவி கத்தும் கூக்குரலையும்   
   
இசையென நினைந்திருப்பேன்

நான் படிக்காமல் போயிருந்தால்?
    
அங்கங்களை அரிக்கும்
    
ஜீன்ஸ் உடையை தவிர்த்து
    
உடல் ஜீன்களுக்கு உயிர் கொடுத்திருப்பேன்.

சரஸ்வதியே, நீ வைத்திருக்கும் வீணை கூட கேள்வி மீட்டும், படித்தவன் என்பவன் பணத்தை மட்டும் சம்பாதிப்பவனா இல்லை நல்ல குணத்தையும் சேர்த்து சம்பாதிப்பவனா என்று.

             -
பாமரனாக மாறத் துடிக்கும் மெத்தப் படித்தவன்.
                                       (
மோகன் கந்தசாமி )