Friday, May 17, 2013

நான் படிக்காமல் போயிருந்தால்?

நான் படிக்காமல் போயிருந்தால்?
    
பெரியவர்களை மதித்திருப்பேன் 
    
நல்லவைகளை மட்டும் துதித்திருப்பேன்.

 நான் படிக்காமல் போயிருந்தால்?
      
எளிய வார்த்தைகளில்
      
தமிழ் பேசியிருப்பேன்    
     
முகம் சுளிக்கும்
    
காரியங்களை தவிர்த்திருப்பேன்.

  நான் படிக்காமல் போயிருந்தால்?
    
தரங்கெட்ட  மனிதர்கள் காசுக்காக
    
வெளியை மாசுபடுத்தும் செயலை
    
மரம் வைத்து திறம் படத் தடுத்திருப்பேன்.

நான் படிக்காமல் போயிருந்தால்?
    
பீட்சா, பர்கர், நூட்ல்ஸ் , கோக்
    
போன்ற வாய் கூசும் உணவுகளை
    
மனம் கூசி மறுத்திருப்பேன்.

 நான் படிக்காமல் போயிருந்தால்?
    
ஆண்மைக்கும் பெண்மைக்கும்
    
அழகாக கோடு பிரித்து
    
மனிதம் எனும் மகத்தான
    
வீடு வடித்திருப்பேன்.

  நான் படிக்காமல் போயிருந்தால்?
    
கேளிக்கையில் நாளிகையை வீணாக்காமல்
    
வாழ்க்கைக்கு பண்பு எனும் ஆடை உடுத்தி
    
சுயநலம் எனும் நிர்வாணத்தை தவிர்த்திருப்பேன்.

  நான் படிக்காமல் போயிருந்தால்?
     
மதுபானம், சிகரெட், ஆபாசம், இவையெல்லாம்
    
கெட்ட வார்தையென கூறி அனுபவிக்க மறுத்திருப்பேன்.
     '
நேர் பட' பேசும் கலையை உலக
     
வரைபடத்தில் தேடியிருக்க மாட்டேன்.

 நான் படிக்காமல் போயிருந்தால்?
    
மாட்டுச் சாணத்தை அசிங்கமென சொல்லாமல்
   
கிருமி கொல்லி என உரைத்திருப்பேன்.
   
அரிசி மாக்கோலம் அழகுக்கில்லை எறும்புக்கு
   
உணவென தத்துவம் பேசியிருப்பேன்.

 நான் படிக்காமல் போயிருந்தால்?
   "Gated Community"
என்று என்னை என் வீட்டுக்குள்
   
சிறை வைக்காமல், திண்ணை வைத்து
   
வழிப்போக்கனக்கும் வசதி கொடுத்திருப்பேன்.

 நான் படிக்காமல் போயிருந்தால்?
    
ஊருக்கு நீர், இதில் யார்க்கு போர்
   
என நதிகளை மட்டுமல்ல
   
மனிதர்களையும் இணைத்திருப்பேன்.

 
நான் படிக்காமல் போயிருந்தால்?
    
காதைப் பிளக்கும் சத்தத்தை
   
இசை என்று கூறாமல்
   
கன்னி அணியும் கொலுசின் ஓசையையும்
   
குருவி கத்தும் கூக்குரலையும்   
   
இசையென நினைந்திருப்பேன்

நான் படிக்காமல் போயிருந்தால்?
    
அங்கங்களை அரிக்கும்
    
ஜீன்ஸ் உடையை தவிர்த்து
    
உடல் ஜீன்களுக்கு உயிர் கொடுத்திருப்பேன்.

சரஸ்வதியே, நீ வைத்திருக்கும் வீணை கூட கேள்வி மீட்டும், படித்தவன் என்பவன் பணத்தை மட்டும் சம்பாதிப்பவனா இல்லை நல்ல குணத்தையும் சேர்த்து சம்பாதிப்பவனா என்று.

             -
பாமரனாக மாறத் துடிக்கும் மெத்தப் படித்தவன்.
                                       (
மோகன் கந்தசாமி )

No comments:

Post a Comment