Thursday, July 4, 2013

இன்னும் நிறைவேறாத பெண் உரிமைகள்

                                         ஆதி நாட்களிலிருந்து பெண் என்பவள் ஆணுக்கு ஊழியம் செய்யும் அடிமை பொருளாக இருந்து வந்தது, சில தலைமுறைகளாக தந்தை பெரியார், அம்பேத்கர் போன்ற நன்மக்களின்  சீரிய முயற்சியால் இழந்த  உரிமைகளை மெல்லப் பெற்று வருகிறார்கள். இருந்த போதிலும், பெண் என்பவள் தன் அனைத்து உரிமைகளையும் பெற்று விட்டனரா என்றால், பதில் இல்லை என்றே சொல்ல வேண்டும்.


நான் வாழும் சமுதாயத்தில், நான் கண் கூடாக பார்த்த 'பெண்ணியம்' சார்ந்த உரிமை மறுப்புகளை உங்கள் பார்வைக்காக கீழே குறிப்பிட்டுள்ளேன்.


பெண்ணை அடிமையாகவே பார்த்த ஆண்களின் எண்ணம் தலைமுறை தலைமுறையாக ஜீன்களின் வழியே வந்து இன்னமும் ஆட்சி செய்வதை நாம் காணலாம். ஒரு வீட்டில் ஆண் என்பவன் வெறும் தொழிற் கூடம் மட்டும் சென்று பொருள் ஈட்டுவான். வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் பெண் மட்டுமே செய்ய வேண்டும். இது அந்த பெண் வேலைக்கு சென்றாலும் சரி, இல்லை செல்ல விட்டாலும் சரி, அது அவர்களுக்கு ஆண்களால் விதிக்கப்பட்ட மறுக்கப்படாத (மறுக்க கூடாத) ஒரு தெய்வீகப் பணி. வீட்டு வேலைகளை சரி சமமாக எடுத்துச் செய்யாத ஆண்கள், பெண் உரிமை பற்றி பேச எந்த அருகதையும் இல்லை. பொதுவாக ஆண்களை விட பெண்கள் உடல் அளவில் சிறிது பலம் குறைந்தவர்கள், ஆனால் மன அளவில் ஆண்களை விட பெண்கள் பல மடங்கு வலிமை மிக்கவர்கள். பெண் என்பவள் வீட்டு வேலை செய்ய மட்டுமே உபயோகமாக இருப்பாள் என்று நினைக்கும் ஆடவர்கள், நிச்சயம் பேடித் தன்மை பொருந்திய கோழைகளே. இனியாவது ஆண்கள் சமைத்தல், துணி துவைத்தல், வீட்டை பெருக்குதல், குழந்தைகளை கவனித்தல், பாத்திரம் கழுவுதல் போன்ற வீட்டு வேளைகளில் தன் வீட்டுப் பெண்களுக்கு உதவலாம், முடிந்தால் பெண்களுடன் போட்டி போட்டுக் கொண்டு இந்த வேலைகளை செய்யலாம். வீட்டு வேலை செய்யும் கணவனை, மனைவி கணவனாக பார்க்க மாட்டாள், கடவுளாகவே வணங்குவாள்.


ஆண் வாரிசுக்கு மட்டுமே சொத்துரிமை உண்டு என்ற காலத்தில், பெரியாரின் முயற்சியால் பெண்களுக்கு கொஞ்சம் சொத்துரிமை கிடைத்து வந்தது.  அதென்ன ஆண்  மட்டும் அனைத்து சொத்துகளையும் வைத்து கொள்வது, பெண்ணுக்கு ஏதுமில்லை என்று கைவிரிப்பது. மக்கள் சொல்லும் பதில், பெண் என்பவள் அடுத்த வீட்டிற்கு போகிறவள், அவளுக்கு எதற்கு சொத்தில் சம உரிமை கொடுக்க வேண்டும். நிச்சயம் பெண்ணுக்கு சம சொத்துரிமை கிடைக்க நாம் வழிவகை செய்ய வேண்டும். என் அக்காவிடம் ஏற்கனவே சொல்லிவிட்டேன், எனக்கு கிடைக்கும் சொத்தில் சம பாதி என் அக்காவிற்கும் என்று.


கணவன் - மனைவிக்கு குழந்தை பிறந்தால், குழந்தைக்கு தகப்பன்  பெயரின் முதல் எழுத்தை initial ஆக வைத்தல் என்பதே நியதி எனக் கூறுவது நிச்சயம் அறிவுள்ள மானிடர்க்கு பொருந்தாது. சமீப காலமாக தந்தை, தாய் இருவரின் பெயர்களின் முதல் எழுத்தை குழந்தைக்கு initial ஆக வைப்பதை நான் பார்க்கிறேன், ஆனால் இதை சட்டமாகவே இயற்ற வேண்டும்.


இன்னுமொரு மிகப்பெரும் சாபக்கேடு , வீட்டில் எந்தவொரு முடிவையும் பெண்ணின் ஆலோசனையோ, ஒப்புதலோ இல்லாமல், ஆண்மகன் தன்னிச்சையாகவே எடுக்கிறான். இது ஆண் பெண்ணை நடத்தும் கீழ்த்தரமான செயல். குடும்பத்தில்  எடுக்கப்படும்  ஒவ்வொரு முடிவிலும் பெண்ணின் பங்கு நிச்சயம் இருக்க வேண்டும்.


பெண்ணிற்கு சம உரிமை கொடுக்கும் தேசத்தில் தான் மும்மாரி மழையும் சரமாரியாக பெய்யும்.


பெண்ணின் வயிற்றில் கருவுண்டோம்
பெண்ணின் ரத்தத்தை பாலாக உண்டோம் 
பெண்ணின் அரவணைப்பில் ஆளானோம்
பெண் துணையால் வாழ்க்கையில் வளம் பெற்றோம்
பெண்ணியம் போற்றுவோம்  பெண்ணியம் போற்றுவோம்!!!




                                               
                                                                                                   -  மோகன் கந்தசாமி

Tuesday, July 2, 2013

நம் நோய்க்கு அன்பன்றி வேறு மருந்தில்லை

                          
                               காலங்காலமாக சக மனிதர்களுக்கு பாசமும், பரிவும்,மதிப்பும்,மரியாதையும் தந்த நம் இந்தியர்கள்,உலக மயமாக்களின் விளைவாக, தனி மனிதரின் வருமானம் தன் முந்தய தலைமுறை சொப்பனத்திலும் நினைந்திராத அளவு ஈட்டுகிறது. இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு முன் குடும்பத் தலைவி சமைக்கும் போது தன் குடும்பத்திற்கு மட்டுமல்லாமல் இரண்டு மூன்று பேருக்கு சேர்த்து சமைப்பராம்.காரணம் தன் சிறு மகனோ அல்லது மகளோ விளையாடிவிட்டு வரும் போது,உடன் பழகும் நண்பர்களையும், பக்கத்து வீட்டு குழந்தைகளையும் கூட்டி வருவர். தாய் அந்த குழந்தைகளுக்கும் சேர்த்து உணவு பரிமாறுவார். இப்பொழுதோ "Gated community" என்று நம்மை நாமே சிறை வைத்துக் கொள்கிறோம். பக்கத்து வீட்டு சின்ன பையனோ, பெண்ணோ நம் வீட்டிற்கு வந்து விளையாடும் போது சாப்பிடும் நேரம் வந்த விட்டால், இதயத்தில் சிறிதும் இரக்கம் இல்லாமல், "தம்பி உங்க வீட்டில் போய் விளையாடு" என்று சொல்லி கதவை மட்டுமில்லாமல் இதயத்தையும் இறுகத் தாழிட்டுக் கொள்கிறோம்.


'அறம் செய விரும்பு' என்று அவ்வையாரின் கூற்று படி வாழ்ந்த நம் மக்கள் கூட,இப்பொழுது ரோட்டில் கிடக்கும் ஒரு ருபாய் பணத்தை வேகமாக ஓடி எடுக்கும் தன் மகனையும், பேருந்திலோ அல்லது எங்கேனும்  நீண்ட வரிசையை முந்தி, இடம் பிடிக்கும் மகனையும் தான் "பையன் ரொம்ப நல்ல விவரமா இருக்கான்" என்று மதி கெட்டு பிதற்றுகிறது. 


நாகரீகம் என்ற பெயரில், படித்த ஆடவரும்,வனிதையரும் கூட "F" என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் நான்கெழுத்து கெட்ட வார்த்தை பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.  இந்த கெட்ட  வார்த்தையை உபயோகிக்காத மனிதர்களை சமூக நோயாளிகளாக புறந் தள்ளுகின்றனர். நல் அனுபவம் சொரிந்துள்ள வயோதிகர்களை கூட 'பெரிசு', 'பூட்ட கேசு', என்று வாய் கூசும் வார்த்தைகளால், மனம் கூசாமல் அலட்சியப்படுத்துகின்றனர். ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே இயல்பாக மலரும் காதல் எனும் மணம் வீசும் பூவை கூட காமம் என்ற பெயரில் நம் ஊடகங்கள் காசுக்காக கலங்கப்படுத்துகின்றனர்.


பர்த்டே பார்ட்டி என்ற பெயரிலும் ட்ரீட் என்ற பெயரிலும் வசதியுள்ள மக்கள் செய்யும் அனாவசிய செலவால், உடன் இருக்கும் வசதி குறைந்த மனிதர்களும் அதே போன்று செலவு செய்ய வேண்டும் என்ற ஒரு சமூக கட்டாயத்தை நாம் நம்மை அறியாமலே உருவாக்கியுள்ளோம். படித்த நாம் சிறிதும் சமூக அக்கறை இல்லாமல், மற்ற மனிதர்கள் மேல் எந்தவொரு பாசமோ, அக்கறையோ இன்றி மதி கெட்டும் தறி கெட்டும் திரிகின்றோம்.


தன் மகனுக்கு பெண் பார்க்கும் தந்தையோ அல்லது மகளுக்கு வரன் பார்க்கும் தந்தையோ மணமகன் / மணமகளின் ஒழுக்கம் பற்றிய விசயங்களுக்கு கடைசி இடமே தருகின்றனர்.   பெண்ணின் / ஆணின் சொத்து மற்றும் நகைகளுக்கே  முன்னுரிமை தருகின்றனர். மக்கள் எவ்வாறு பணத்திற்கு மதிப்பு தருகின்றனர் என்பதற்கு இதை விட உதாரணம் வேறு இல்லை.


உடலுக்கும் மனதிற்கும் சக்தியேற்ற கோவிலுக்கு சென்றனர் நம் முன்னோர்கள்.ஆனால் இன்று நாமோ நம் பிழைப்பு சார்ந்த அனைத்து சுய தேவைகளுக்கும் கடவுள் முன் மண்டியிட்டு முறையிடுகிறோம்.ஒருவேளை கடவுள் இருந்திருந்தால், நம் காலில் விழுந்து தன்னை விடுவிக்க நம்மை வேண்டியிருப்பார். பாசமோ, பரிவோ பக்தியோ நாம் செல்லும் எந்த கோவிலிலும் இப்போது இல்லை. கோவிலை வைத்து மிகப்பெரும் வர்த்தகம் பின்புலத்தில் நடந்தேறுவது நம் அறிவுக்கு எட்டுவதில்லை.


பொருளாதார நிறைவு ஒன்று மட்டுமே வாழ்க்கையின் நோக்கம் என்று, பணத்தின் பின்னே மதியறியாது ஓடும் மக்களிடம், பணத்தை விட நல்லொழுக்கம், மனிதநேயம்,உயர் பண்பு,பொது நோக்கம்,அமைதி,நல்மனம்,நல்லுடல்,ஈகை,மகிச்சி,இரக்கம்,நல்வாழ்க்கை ஆகியவையே மனிதனின் தலையாய குறிக்கோள்கள் என மக்களிடம் எடுத்துச் சொல்லி நல்வழிப்படுத்த புத்தரோ, வள்ளுவரோ, தந்தை பெரியாரோ இனி தோன்றி, மக்களுக்கு சொல்லித்தர வேண்டும் என நினைப்பதில் எந்தவொரு அர்த்தமும் இல்லை.நாம் அனைவரும் விழித்துக் கொள்ளும் நேரம் வந்து விட்டது.


நாம் தீர்க்க வேண்டிய சமூக நோய்கள் நிறையவே உள்ளன. ஆனால் இதற்கு தீர்வு  தான் என்ன? கமல்ஹாசன் சொன்னது  போல் "நம் நோய்க்கு அன்பன்றி வேறு மருந்தில்லை" என்ற கூற்று ஒன்று தான் தீர்வு. 

தீர்வு உங்களுக்கு விளங்கியதோ?

அருகில் இருப்பவர்களிடம்  பாசம் வைப்போம், நேசம் வைப்போம்.

நம் தேசம் எனும் பூச்செடியில் அரும்பிய ‘மனிதம்’ எனும் மொட்டை மலர விடுவோம்.
                                                 
                                                                                                 - மோகன் கந்தசாமி