காலங்காலமாக சக மனிதர்களுக்கு பாசமும், பரிவும்,மதிப்பும்,மரியாதையும் தந்த நம் இந்தியர்கள்,உலக மயமாக்களின் விளைவாக, தனி மனிதரின் வருமானம் தன் முந்தய தலைமுறை சொப்பனத்திலும் நினைந்திராத அளவு ஈட்டுகிறது. இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு முன் குடும்பத் தலைவி சமைக்கும் போது தன் குடும்பத்திற்கு மட்டுமல்லாமல் இரண்டு மூன்று பேருக்கு சேர்த்து சமைப்பராம்.காரணம் தன் சிறு மகனோ அல்லது மகளோ விளையாடிவிட்டு வரும் போது,உடன் பழகும் நண்பர்களையும், பக்கத்து வீட்டு குழந்தைகளையும் கூட்டி வருவர். தாய் அந்த குழந்தைகளுக்கும் சேர்த்து உணவு பரிமாறுவார். இப்பொழுதோ "Gated community" என்று நம்மை நாமே சிறை வைத்துக் கொள்கிறோம். பக்கத்து வீட்டு சின்ன பையனோ, பெண்ணோ நம் வீட்டிற்கு வந்து விளையாடும் போது சாப்பிடும் நேரம் வந்த விட்டால், இதயத்தில் சிறிதும் இரக்கம் இல்லாமல், "தம்பி உங்க வீட்டில் போய் விளையாடு" என்று சொல்லி கதவை மட்டுமில்லாமல் இதயத்தையும் இறுகத் தாழிட்டுக் கொள்கிறோம்.
'அறம் செய விரும்பு' என்று அவ்வையாரின் கூற்று படி வாழ்ந்த நம் மக்கள் கூட,இப்பொழுது ரோட்டில் கிடக்கும் ஒரு ருபாய் பணத்தை வேகமாக ஓடி எடுக்கும் தன் மகனையும், பேருந்திலோ அல்லது எங்கேனும் நீண்ட வரிசையை முந்தி, இடம் பிடிக்கும் மகனையும் தான் "பையன் ரொம்ப நல்ல விவரமா இருக்கான்" என்று மதி கெட்டு பிதற்றுகிறது.
நாகரீகம் என்ற பெயரில், படித்த ஆடவரும்,வனிதையரும் கூட "F" என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் நான்கெழுத்து கெட்ட வார்த்தை பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்த கெட்ட வார்த்தையை உபயோகிக்காத மனிதர்களை சமூக நோயாளிகளாக புறந் தள்ளுகின்றனர். நல் அனுபவம் சொரிந்துள்ள வயோதிகர்களை கூட 'பெரிசு', 'பூட்ட கேசு', என்று வாய் கூசும் வார்த்தைகளால், மனம் கூசாமல் அலட்சியப்படுத்துகின்றனர். ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே இயல்பாக மலரும் காதல் எனும் மணம் வீசும் பூவை கூட காமம் என்ற பெயரில் நம் ஊடகங்கள் காசுக்காக கலங்கப்படுத்துகின்றனர்.
பர்த்டே பார்ட்டி என்ற பெயரிலும் ட்ரீட் என்ற பெயரிலும் வசதியுள்ள மக்கள் செய்யும் அனாவசிய செலவால், உடன் இருக்கும் வசதி குறைந்த மனிதர்களும் அதே போன்று செலவு செய்ய வேண்டும் என்ற ஒரு சமூக கட்டாயத்தை நாம் நம்மை அறியாமலே உருவாக்கியுள்ளோம். படித்த நாம் சிறிதும் சமூக அக்கறை இல்லாமல், மற்ற மனிதர்கள் மேல் எந்தவொரு பாசமோ, அக்கறையோ இன்றி மதி கெட்டும் தறி கெட்டும் திரிகின்றோம்.
தன் மகனுக்கு பெண் பார்க்கும் தந்தையோ அல்லது மகளுக்கு வரன் பார்க்கும் தந்தையோ மணமகன் / மணமகளின் ஒழுக்கம் பற்றிய விசயங்களுக்கு கடைசி இடமே தருகின்றனர். பெண்ணின் / ஆணின் சொத்து மற்றும் நகைகளுக்கே முன்னுரிமை தருகின்றனர். மக்கள் எவ்வாறு பணத்திற்கு மதிப்பு தருகின்றனர் என்பதற்கு இதை விட உதாரணம் வேறு இல்லை.
உடலுக்கும் மனதிற்கும் சக்தியேற்ற கோவிலுக்கு சென்றனர் நம் முன்னோர்கள்.ஆனால் இன்று நாமோ நம் பிழைப்பு சார்ந்த அனைத்து சுய தேவைகளுக்கும் கடவுள் முன் மண்டியிட்டு முறையிடுகிறோம்.ஒருவேளை கடவுள் இருந்திருந்தால், நம் காலில் விழுந்து தன்னை விடுவிக்க நம்மை வேண்டியிருப்பார். பாசமோ, பரிவோ பக்தியோ நாம் செல்லும் எந்த கோவிலிலும் இப்போது இல்லை. கோவிலை வைத்து மிகப்பெரும் வர்த்தகம் பின்புலத்தில் நடந்தேறுவது நம் அறிவுக்கு எட்டுவதில்லை.
பொருளாதார நிறைவு ஒன்று மட்டுமே வாழ்க்கையின் நோக்கம் என்று, பணத்தின் பின்னே மதியறியாது ஓடும் மக்களிடம், பணத்தை விட நல்லொழுக்கம், மனிதநேயம்,உயர் பண்பு,பொது நோக்கம்,அமைதி,நல்மனம்,நல்லுடல்,ஈகை,மகிச்சி,இரக்கம்,நல்வாழ்க்கை ஆகியவையே மனிதனின் தலையாய குறிக்கோள்கள் என மக்களிடம் எடுத்துச் சொல்லி நல்வழிப்படுத்த புத்தரோ, வள்ளுவரோ, தந்தை பெரியாரோ இனி தோன்றி, மக்களுக்கு சொல்லித்தர வேண்டும் என நினைப்பதில் எந்தவொரு அர்த்தமும் இல்லை.நாம் அனைவரும் விழித்துக் கொள்ளும் நேரம் வந்து விட்டது.
நாம் தீர்க்க வேண்டிய சமூக நோய்கள் நிறையவே உள்ளன. ஆனால் இதற்கு தீர்வு தான் என்ன? கமல்ஹாசன் சொன்னது போல் "நம் நோய்க்கு அன்பன்றி வேறு மருந்தில்லை" என்ற கூற்று ஒன்று தான் தீர்வு.
தீர்வு உங்களுக்கு விளங்கியதோ?
அருகில் இருப்பவர்களிடம் பாசம் வைப்போம், நேசம் வைப்போம்.
நம் தேசம் எனும் பூச்செடியில் அரும்பிய ‘மனிதம்’ எனும் மொட்டை மலர விடுவோம்.
- மோகன் கந்தசாமி
Very nice mohan :)
ReplyDeleteYour thinking is out of box Mohan, Admirable...
ReplyDeleteGreat thoughts :)
ReplyDeleteGood one!!
ReplyDelete